அட்சய திருதியை; தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை

இந்த ஆண்டில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Mumbai: Women at a jewellery shop at Dadar on the occasion of the Akshaya Tritiya festival
Photo Credit: PTI
Published on

சென்னை,

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் தங்கம், வைரம், வெள்ளி நகை விற்பனை களைகட்டியது. அட்சய திருதியை நேற்று முன்தினம் அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி நேற்று மதியம் 2.50 மணியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பல்வேறு இடங்களில் நகைகடைகள் திறக்கப்பட்டன. அதேபோல், நேற்றும் அதிகாலையிலேயே பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. விடுமுறை தினம் என்பதால், அட்சய திருதியை 2-வது நாளில் நேற்று நகைக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

2 நாட்களில் தமிழகத்தில் 22 டன் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளது.இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, 'அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் தங்கம், வைரம், வெள்ளி நகை விற்பனை அதிகம் காணப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி விற்பனை ஆனது.

இந்த ஆண்டு ரூ.14 ஆயிரத்து 500 முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரையில் விற்பனை ஆனது. கிட்டத்தட்ட 22 ஆயிரம் கிலோ (22 டன்) தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்பட்டன. அட்சய திருதியையொட்டி அறிவிக்கப்பட்ட சலுகைகள் இன்று (ஞாயிற்றுகிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்தி லால் ஜெலானி கூறும்போது, 'அட்சய திருதியை நாளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 30 சதவீதம் தங்க விற்பனை அதிகரித்து உள்ளது.இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகையை வழங்கி வருகிறது. இதனை பெற்ற நடுத்தர பெண்கள் பலர் நகைக்கடைகளில் மாதாந்திர சீட்டுகளில் சேர்ந்து பணத்தை கட்டி வந்தனர்.இந்த பணத்தை கொண்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அட்சய திருதியை நாளில் ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்பில் சிறிய தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com