

ஓசூர்,
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஓசூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.34 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி அறிவித்ததையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, ரூ.50,000-க்கு மேற்பட்ட பணத்தை உரிய ஆவணங்களின்றி ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால், தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஓசூரில் உள்ள ஏடிஎம்களில் நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.2.34 கோடி பணம், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.