ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பரும்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் யோவான். இவரது மகன் திலீப்குமார். இவர்கள் 2 பேரின் வீடுகளும் அருகருகே உள்ளன. உடற்கல்வி ஆசிரியரான திலீப்குமாரின் மனைவி ஈகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திலீப்குமாருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் வேலை கிடைத்ததால் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு சென்றுவிட்டார்.
கடந்த வாரம் ஊரில் நடந்த திருவிழாவுக்காக திலீப்குமார் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது திலீப்குமார் தனது வீட்டின் பீரோவில் மனைவியின் நகைகளை வைத்துவிட்டு மீண்டும் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கடந்த 2ம்தேதி இரவில் திலீப்குமார் வீட்டின் மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன் நகைகளையும், ரூ.75 ஆயிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். திலீப்குமாரின் வீட்டின் மாடி கதவு திறக்கப்பட்டு இருப்பதை அறிந்்த யோவான் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சத்தை மர்ம நபர்கள் ெகாள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.