வீட்டில் பதுக்கிய 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வியாபாரி கைது

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் விற்பனைக்காக புகையிலை மூட்டைகள் ரகசியமாக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபாட்டில்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒடுக்கி, சட்டம்-ஒழுங்கு உள்கட்டமைப்பை பலப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, மேலக்கரந்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விநியோகம் செய்யப்படுவதாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்குரிய முத்தையா மகன் அதிவீரன் (வயது 68) என்ற வியாபாரியின் வீட்டில் சோதனை நடத்தினர்.

28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:

போலீசார் நடத்திய தீவிர சோதனையின் போது, அந்த வீட்டின் படுக்கையறையில் விற்பனைக்காக புகையிலை மூட்டைகள் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கட்டிலுக்கு அடியில் மிக சாதுரியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 28 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பணம், பைக் பறிமுதல்:

மேலும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்றதன் மூலம் அவரிடமிருந்த ரொக்கப் பணம் ரூ.18 ஆயிரம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரி அதிவீரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com