2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி

2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி
Published on

ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு திட்டத்தின்படி பறவைகள் கணக்கெடுப்பு முதல் கட்ட பணி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் 15 இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. முக்கொம்பு வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மட்டும் 55 வகையான நீர் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து 2-ம் கட்டமாக நேற்று முன்தினம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி உதவி வன பாதுகாப்பு அலுவலர் சம்பத்குமார் தலைமையில் திருவெறும்பூர் பகுதிகளில் 5 குழுக்களாக பிரிந்து 50-க்கும் மேற்பட்டோர் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று காப்புக்காடுகள் பகுதிகளான பச்சைமலை, மணப்பாறை, துவரங்குறிச்சி உள்ளிட்ட நிலப்பரப்புகளில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பச்சைமலை பகுதியில் துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். சோபனபுரம், டாப்செங்காட்டுப்பட்டி, சோளமாத்தி, காளியம்மன் கோவில் திட்டு, கன்னிமார் சோலை உள்ளிட்ட காப்புக்காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில் பச்சைமலை பகுதியில் 85 பறவையினங்கள், மணப்பாறை பகுதியில் 54 பறவையினங்கள், துவரங்குறிச்சி பகுதிகளில் 25 பறவையினங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இதில் புன் முதுகு மரம் கொத்தி, பச்சை கிளி, தேன் சிட்டு, அரச வால், வால் காக்கை, மைனா, மணிப்புறா, கொண்டல வாத்தி, மயில், நீலவால் கிச்சன், தேன் பருந்து, சொர்க்கப்பறவை உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com