

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், அவரது மகளுக்கு கல்வி உதவி தொகை வத்துள்ளது என ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றி நம்ப வைத்து, அவரது வங்கி கணக்கு எண் மற்றும் PIN நம்பரின் விவரங்களை பெற்றுள்ளனர். பின்னர் அவருக்கு QR Code ஒன்றை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறு கூறி, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.99 ஆயிரத்து 743 பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். மேற்சொன்ன மோசடி செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் திவாகர், ரஞ்சித்குமார், செல்வதினேஷ், ஷேக் முகமது மைதீன் ஆகியோர் மேற்சொன்ன மோசடி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், வங்கி பரிவர்த்தனை தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் டெல்லியில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் தனிப்படை, டெல்லி சென்று, குற்றவாளிகளான ராஜீ (வயது 24), ரிஷி(27), ராகுல்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, உரிய சட்ட வழிமுறைகளுக்கு பின்னர், திருநெல்வேலி அழைத்து வந்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகளை விசாரணை செய்தபோது, அவர்கள் இதுபோன்று மோசடி அழைப்புகள் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை தொடர்பு கொண்டது தெரிய வருகிறது. மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட, குற்றவாளிகளை துரிதமாக கண்டறிந்து, டெல்லி சென்று கைது நடவடிக்கை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
மேலும் "கல்வி உதவித்தொகை" வழங்கப்படும் என கூறி வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் WhatsApp செய்திகளை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். வங்கி கணக்கு விவரங்கள், OTP > PIN போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். இதுபோன்ற சைபர் குற்றங்களுக்கு உள்ளானால், 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணின் மூலம் அல்லது cybercrime.gov.in இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.