ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் ; அதிமுக 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் ; அதிமுக 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தல் வாக்குறுதி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, அதிமுக ஏற்கனவே 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக 2ம் கட்ட வாக்குறுதிகள் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

அதிமுக வெளியிட்ட 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:-

* முதியோருக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

* சிறுபான்மையினர் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கனவே, முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதன் விவரம் வருமாறு:-

* சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* `அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி `அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

* 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

* மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com