கலிங்கப்பட்டி ஊராட்சியில் 3 வளர்ச்சிப் பணிகள்: துரை வைகோ கோரிக்கைக்கு நிர்வாக அனுமதி!

3 வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.45.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோ
Published on: 

தென்காசி,

12 குக்கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சியான கலிங்கப்பட்டிக்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டித் தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கடந்த (19.09.2026 )அன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தை சந்தித்து துரை வைகோ கோரிக்கை விடுத்திருந்தார் . இந்த நிலையில், துரை வைகோவின் கோரிக்கைகளை ஏற்று 3 முக்கியப் பணிகளுக்கு ரூ.45.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.45.78 லட்சம் நிதி ஒதுக்கீடு

இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சியில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கியப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ.45.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகக் கட்டிடம் முழுமையாகச் சேதமடைந்ததுடன், முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாகின. இதனால், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுக் சங்கக் கட்டிடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குக் கூட உரிய வசதியின்றி ஊராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வந்தது.

அமைச்சரிடம் கோரிக்கை

12 குக்கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சியான கலிங்கப்பட்டிக்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டித் தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கடந்த (19.09.2026 )அன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தேன். இதன் தொடர்ச்சியாக, தற்போது புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு ரூ.30.91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அருகிலுள்ள கிணற்றால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க, பாதுகாப்புச் சுற்றுச் சுவர் அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தேன். தற்போது அப்பணிக்கும் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு ரூ.7.93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அனுமதி

அதனைத் தொடர்ந்து கலிங்கப்பட்டி கிராமத்தில் கிழக்குத் தெருவில், அப்பகுதிக் குடியிருப்புகளுக்குச் செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டி, சிமெண்ட் சாலை அமைக்கக் கோரிக்கை வைத்திருந்தேன். இதற்கும் தற்போது நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு ரூ.6.94 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலிங்கப்பட்டி ஊராட்சியின் வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து வருகிறேன். கலிங்கப்பட்டி மட்டுமின்றி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com