

காட்பாடி,
நண்பரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தம் (வயது 18). இவர் குளோபல் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் தன்னுடைய நண்பர்களான சென்னை சவீதா கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் பிரவீன் (18), காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பி.சி.ஏ. படிக்கும் சித்தார்த் (18), எம்.டெக். முதலாமாண்டு படிக்கும் அரிக்குமார் (18) ஆகியோரை பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து நண்பர்கள் 3 பேரும் பிறந்த நாள் கேக்கை வாங்கிக்கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட காட்பாடி ஈசன் ஓடை பகுதிக்கு சென்றனர்.
அங்குள்ள ஒரு கோவில் முன்பு பிற்பகல் 2.30 மணி அளவில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடினார்கள். விழாவின்போது கேக்கில் உள்ள கிரீமை எடுத்து அவர்கள் ஒருவர் மீது ஒருவர் முகத்தில் பூசிக் கொண்டனர். பின்னர் இதனை சுத்தம் செய்வதற்காக அருகில் இருந்த கல்குவாரி குட்டைக்கு சென்றனர். முதலில் சித்தார்த் இறங்கி கைகளை கழுவினார்.
3 பேர் சாவு
அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை நண்பர்களான அரிக்குமார், பிரவீன் ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். இதில் 3 பேரும் தவறி விழுந்து குட்டையில் மூழ்கினர். கைகழுவ சென்றவர்கள் திரும்பி வராததால் பிரீத்தம் கல்குவாரி குட்டைக்கு சென்று பார்த்தபோது 3 பேரும் குட்டையில் மூழ்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், காட்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.