தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு 3 ஆடுகள் சாவு

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
தூத்துக்குடியில் ரெயில்வே தண்டவாளம் மாநகரின் நடுவில் அமைந்துள்ளது. மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் அமைந்து உள்ளதால், அதனை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. ரெயில் தண்டவாளம் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டமும் உள்ளது. சம்பவத்தன்று மாலையில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
அப்போது தூத்துக்குடியில் இருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரெயில் வந்தவுடன் தண்டவாளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அங்கிருந்து ஓடின. ஆனாலும் தண்டவாளத்தில் சிக்கிய 4 ஆடுகள் மீது ரெயில் மோதியது. இதில் 3 ஆடுகள் உடல் துண்டாகி தூக்கி வீசப்பட்டு இறந்தன. அதில் ஒரு ஆடு காலில் காயத்துடன் தப்பியது. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை செய்தனர்.






