

பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்து நடந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் உள்பட இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட போலீசார் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின்பேரில். துணை சூப்பிரண்டு தனஞ்செயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ (வயது 51), ஏட்டு சுதாராணி (42) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டார்.
இதற்கிடையே அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை போலீஸ்காரர் மணிகண்டன் (35) பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்ற நிலையில், அவரை பணி நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மேலும் ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் லியோனி ரஞ்சித்குமார். இவர், இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருந்தார். அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோனி ரஞ்சித்குமாரை கட்டாய ஓய்வில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீசார் உள்பட மொத்தம் 4 போலீசார் மீது நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.