கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: வானதி சீனிவாசன் கண்டனம்

உயிரிழந்தவர்கள் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைத் தேடிச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: வானதி சீனிவாசன் கண்டனம்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

3 தமிழர்கள் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

துப்பாக்கிச்சூடு

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக வனத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவர்கள் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைத் தேடிச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் கூறும் நிலையில், அவர்கள் வேட்டையாடச் சென்றதாக கர்நாடக வனத்துறை தெரிவிக்கிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உரிய விசாரணை நடத்தி, உண்மையை கர்நாடக அரசு விரைவில் வெளிக்கொணர வேண்டும்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தவருக்கு தேவையான மருத்துவ உதவியும் வழங்கிட கர்நாடக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com