அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி - வெளியான உருக்கமான தகவல்

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி 3 வாலிபர்கள் பலியாகினர்.
அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி - வெளியான உருக்கமான தகவல்
Published on

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் சந்திப்பு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது டவுன் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் உயிரிழந்த வாலிபர்கள் நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 23), முகமது அலி தெருவை சேர்ந்த சாதிக் (23), சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. இதற்கிடையே பலியான 3 பேர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விபத்தில் இறந்த லோகேஷ் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், சாதிக் ஒரு ஓட்டலிலும் வேலைபார்த்து வந்துள்ளனர்.

சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சந்தோஷ் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு வந்தார். நீண்டநாள் கழித்து விடுமுறைக்கு நண்பன் வந்துள்ளதால் 3 பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டைக்கு பானிபூரி சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த கோர விபத்து நடந்துவிட்டதாக அவர்களின் உறவினர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com