சாலையில் கிடந்த 30 பவுன் நகை: போலீசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு!

பொதுமக்களும் அவருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சாலையில் கிடந்த 30 பவுன் நகை: போலீசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு!
பாப்பையா
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலையில் கிடந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சாலையில் தவறவிட்ட பை

தென்காசி மாவட்டம் அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 68). இவர் நேற்று (திங்கட்கிழமை) தனது 245 கிராம் (சுமார் 30 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் வழியாகச் சென்றபோது, ஆரியங்காவூர் சாலையில் அந்த பையைத் தவறவிட்டுள்ளார்.

முதியவரின் நேர்மை

அப்போது அந்த வழியாகச் சென்ற மேட்டூரைச் சேர்ந்த பாப்பையா (வயது 76) என்ற முதியவர், சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையைக் கண்டெடுத்தார். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே அதிக அளவிலான தங்க நகைகளும் பணமும் இருப்பதைக் கண்டு, சிறிதும் தயங்காமல் உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் வேல்கனிடம் அந்த பையை ஒப்படைத்தார்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நகைகள் அரியப்பபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், உரிய ஆவணங்களைச் சரிபார்த்த போலீசார், நகைகளையும் பணத்தையும் அதன் உரிமையாளர் சுப்பிரமணியனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

முதியவருக்கு பாராட்டு

விலைமதிப்பற்ற தங்க நகைகளைக் கண்டெடுத்தும், அதனை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் பாப்பையாவின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டுக்களை தெரிவித்தனர். பொதுமக்களும் அவருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X