சென்னை தீவுத்திடலில் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தீவுத்திடலில் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
Published on

சென்னை,

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

இதையடுத்து சென்னை தீவுத்திடலில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com