

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள அப்பர்குளத்தைச் சேர்ந்தவர் கணேஷ்பெருமாள் (வயது 45). இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி, குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மாரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அப்பர்குளத்தில் உள்ள கணேஷ்பெருமாளின் வீடு பூட்டியே கிடந்தது.
வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 31 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
நேற்று காலையில் கணேஷ்பெருமாள் வெளிநாட்டில் இருந்தவாறே, தனது வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் செல்போன் மூலம் ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர் தனது மனைவி பானுமதிக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து பானுமதி அளித்த புகாரின் பேரில், களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.