

ராமநாதபுரம்,
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 32 பவுன் நகைகள் திருடுபோயின. இதுதொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி கவுசல்யா (வயது 55). இவர் சம்பவத்தன்று சாயல்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்த 32 பவுன் நகைகளை பையில் எடுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து பஸ் ஏறி ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடிக்கு பஸ்சில் ஏறி மகள் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை மகள் வீட்டில் வைத்து நகைப்பையை பார்த்தபோது அது காணவில்லையாம். இதனால் பதறிய அவர் மண்டபத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். ஆனால் அங்கும் பையை காணவில்லை.
பஸ்சில் செல்லும் நகைப்பையை மர்மநபர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.