33-வது ஆண்டு விழா; பா.ம.க.வினர் நாளை வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

33-வது ஆண்டு விழாவையொட்டி, பா.ம.க.வினர் நாளை (வெள்ளிக்கிழமை) வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
33-வது ஆண்டு விழா; பா.ம.க.வினர் நாளை வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
Published on

இதுபற்றி கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொண்டர்களுக்கு வாழ்த்து

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட பா.ம.க., நாளை 32 ஆண்டுகளை நிறைவு செய்து 33-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பா.ம.க. தொடங்கப்பட்ட 32 ஆண்டுகளில் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்த தருணம் என்னவென்றால், கடந்த 1 ஆண்டுகளில் பாட்டாளி சொந்தங்களாகிய உங்களையெல்லாம் சந்திக்க முடியாத தருணம்தான். எப்போதும் பாட்டாளி சொந்தங்களால் நிரம்பி வழியும் தைலாபுரம் தோட்டம் இப்போது மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

இயல்பு நிலை திரும்பும்

மாதத்தில் பாதி நாட்கள் அரசியல் சார்ந்த சுற்றுப்பயணங்களிலும், தொண்டர்கள் சந்திப்பிலும் கழிக்கும் நான் இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலைகள் இன்னும் சில வாரங்களில் மாறும்; இயல்பு நிலை திரும்பும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். இத்தகைய கடுமையான நெருக்கடியிலும் நாம் சமூகநீதி உரிமைகளை வென்றெடுப்பதில் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 5 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு நமது பிரதிநிதிகளை அனுப்பினோம்.

பா.ம.க.வின் இதயம்

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பா.ம.க. தான். மேலும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்களை கொண்ட இயக்கமும் பா.ம.க.தான். அந்த பெருமைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான். பா.ம.க.வின் இதயமும் நீங்கள் தான். அதில் ஏற்படும் உயிர்த்துடிப்பும் நீங்கள் தான். இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப் போலவே, நீங்கள் இல்லாமல் பா.ம.க.வும் இல்லை. உங்களால்தான் பா.ம.க. துடிப்பாக இயங்குகிறது.வழக்கமாக பா.ம.க. ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தங்களின் வீடுகளில் கொடியேற்றி 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என் மனதில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல், எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திக்கப் போகிறேன்? என்பது தான். மிக விரைவிலேயே அந்த நாள் வரும். அப்போது உங்களை சந்திக்க ஆவலுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com