

சென்னை,
கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இன்று (09.10.2026) சென்னை, தண்டையார் பேட்டை, சரக்கு ரெயில் முனையத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து கொள்முதல் செய்து வரப்பெற்ற 700 மெட்ரிக் டன் வெங்காயத்தினை பார்வையிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், மூன்றாம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (NAFED) மூலம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து (NCCF) 65 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மேலும், இரண்டாவது கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (NAFED) மூலம் 1414.33 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து (NCCF) 460 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு தற்போது மூன்றாவது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் நியாய விலைக் கடைகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (09.10.2026) கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் சென்னை, தண்டையார் பேட்டை, சரக்கு ரெயில் முனையத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து கொள்முதல் செய்து வரப்பெற்ற 700 மெட்ரிக் டன் வெங்காயத்தினை பார்வையிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. இந்நிகழ்வின் போது கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தர்பகராஜ், உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.