தொழிலாளி கொலையில் 4 பேர் கைது

அம்பை அருகே தொழிலாளி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி கொலையில் 4 பேர் கைது
Published on

அம்பை:

அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் வேதக் கோவில் தெருவை சேர்ந்த சண்முக நயினார் மகன் முப்பிடாதி (வயது 35). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வாகைக்குளத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொலையான முப்பிடாதி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து கீழே விழும்போது அங்கு எதிர்பாராதவிதமாக வந்த வாகைக்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கியப்பன் (28) முப்புடாதியை தூக்கி உள்ளார். அப்போது முப்பிடாதி, என்னை எப்படி நீ தூக்குவாய் என கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இசக்கியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் செல்வராஜ் மகன் வேம்பு சுடலை (27), அய்யப்பன் மகன் சுடலைமணி (28), சுடலைமுத்து மகன் அப்ரானந்தம் என்ற கார்த்திக் (27) ஆகியோர் இசக்கியப்பனை எப்படி தாக்கலாம் என கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அம்பை போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com