திருமங்கலம் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி- தாறுமாறாக ஓடிய கார், மறுபுறம் பாய்ந்து லாரியில் மோதியதால் பரிதாபம்

நான்கு வழிச்சாலை தடுப்பில் மோதிய கார் மறுபுறம் பாய்ந்து லாரியில் மோதியது. இந்த வாகனங்களில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
திருமங்கலம் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி- தாறுமாறாக ஓடிய கார், மறுபுறம் பாய்ந்து லாரியில் மோதியதால் பரிதாபம்
Published on

திருமங்கலம்

நான்கு வழிச்சாலை தடுப்பில் மோதிய கார் மறுபுறம் பாய்ந்து லாரியில் மோதியது. இந்த வாகனங்களில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

கப்பலில் வேலை

கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30).

இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல அவர் திட்டமிட்டார். இவர்களுடன் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார்.

கோர விபத்து

இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரே காரில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அதிகாலையில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. காரை ஓட்டி வந்த ஜேம்ஸ் மார்ட்டின், அதை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றி வந்த மினி கன்டெய்னர் லாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் அந்த லாரியும் நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.

4 பேர் பலி

இந்த கோர விபத்தில் காரில் வந்த 3 பேர் மற்றும் கன்டெய்னர் லாரியை ஓட்டிவந்த டிரைவரான மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வாகனங்களில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பயும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com