

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகள், வலைகள் சேதப்படுத்தப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று இருந்தனர்.
இதில் ராமேசுவரத்தை சேர்ந்த சேசூராஜா என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் சக்திவேல் (வயது 54), அருணகிரி (54), சேகர் (66), பாலு (54) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேற்கண்ட 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
அவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஏப்-17ம் தேதி வரை மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 61 நாட் கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவில் இருந்துதான் தொடங்கி உள்ளது.