

சென்னை
தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிட்டார். இதில், இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இந்திய அரசமைப்பு சட்டப்படி இரு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், யாரும் எதிர்பாராத வகையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். அதற்கான கடிதத்தையும் தங்கள் கைப்பட எழுதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ராஜினாமா செய்த கையோடு அந்த 3 பேரும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார். சபாநாயகரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
இதன் காரணமாக ஏற்கனவே காலியானதாக திருச்சி கிழக்கு தொகுதி அறிவிக்கப்பட்டநிலையில், தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தற்போது ராஜினாமா செய்தவர்களே த.வெ.க.சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன என்று தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் அறிக்கை அனுப்பி உள்ளது.
ஏற்கனவே காலியானதாக திருச்சி கிழக்கு தொகுதி அறிவிக்கப்பட்டநிலையில், மேலும் தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தநிலையில், அந்த 4 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டு அந்த தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. திருச்சி கிழக்குத் தொகுதி தொடர்பான அறிக்கை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.