அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 43 சதவீத இடங்கள் - என்ன காரணம்...?

கலந்தாய்வு தொடங்கி இதுவரை 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 43 சதவீத இடங்கள் - என்ன காரணம்...?
Published on

சென்னை,

அரசு கலைக் கல்லூரிகள்

அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களுக்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அந்தந்த அரசு கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

சில கல்லூரிகளில் கலைப் படிப்புகளுக்கு சில நாட்களும், அறிவியல் படிப்புகளுக்கு சில நாட்களும் என மாணவ-மாணவிகள் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு இடங்களை நிர்வாகம் ஒதுக்கியது. முதலில் 18-ந்தேதியுடன் கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால், மேலும் கலந்தாய்வுக்கான தேதி நீட்டிக்கப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

என்ன காரணம்...?

இப்படியாக கலந்தாய்வு தொடங்கி நடந்தாலும், இதுவரை 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்தம் உள்ள1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களில், 71 ஆயிரத்து 502 இடங்கள் (56.32 சதவீதம்) மட்டுமே நிரம்பி இருக்கின்றன. அதில் 43 ஆயிரத்து 970 மாணவிகள், 27 ஆயிரத்து 514 மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் அடங்குவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காட்டிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவதில் தாமதம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் முடிவு வெளியானதுமே தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவுக்கும், அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com