கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சித்ரா விஜயன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:-

திடக்கழிவு மேலாண்மைப் பணி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை கண்காணித்திட பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகளையும் குப்பைகளை உருவாக்குபவர்களுடைய வளாகத்திற்குள் வைத்து, குப்பைகளை வழங்கிட வேண்டும். வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் திடக்கழிவினைத் தரம் பிரித்து வழங்கிட வேண்டும் மீறுவோர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

அதைப்போல, குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், இன்று தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் மத்திய வட்டாரப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இதைப் போல கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பணிகளை கண்காணித்து விரைந்து முடித்திட வேண்டும்.

அத்திப்பட்டு குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 1 லட்சம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com