

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை மற்றும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைகடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை, 2 தினங்களுக்கு 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 1,500 பேருந்துகளும் கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இரவு நேரத்திலும் இந்த 2 நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.