ஆன்லைன் விளையாட்டுகளால் 6 ஆண்டுகளில் 47 பேர் தற்கொலை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. மேலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட யாரையும் அனுமதிக்கக்கூடாது என்ற நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பிளே கேம் பிரைவேட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வக்கீல் அரவிந்த் ஸ்ரீவட்சன் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

"ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை.

அதேபோல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் விளையாடினால் தூக்கமின்மை பாதிப்பு, உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.

ஆதாரங்களை வைத்து சரிபார்க்கும் நடைமுறை கடந்த 8 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதனால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் இல்லை. உளவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படியும், அறிவியல் ரீதியான தரவுகள், ஆய்வுகளின் அடிப்படையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு இறுதி விசாரணைக்காக மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com