செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு!

பயணிகளிடம் அமோக வரவேற்பு பெற்றதன் எதிரொலியாக, 15-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
ரெயில்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி வார ரெயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது செந்தூர் எக்ஸ்பிரஸ். இந்த ரெயில் வழக்கமான ரெயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்படாமல், விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக சென்று மீண்டும் திருச்சியில் இருந்து வழக்கமான பாதையில் சென்றது.

நீண்டுபோன காத்திருப்போர் பட்டியல்

இதனால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2012-ம் ஆண்டு முதல் தினசரி ரெயிலாக மாற்றப்பட்டது. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், 2023-ம் ஆண்டு முதல் சூப்பர் பாஸ்ட் ரெயிலாகவும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மாற்றப்பட்டு, ரெயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டது.

தற்போது, செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், முன்பதிவு பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ரெயிலில் உள்ள 18 பெட்டிகளை 23 பெட்டிகளாக அதிகரிக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.

5 பெட்டிகள் கூடுதலாக இணைப்பு

அதன்படி, வரும் 15-ந் தேதி முதல் சென்னையில் இருந்தும், 16-ந் தேதி முதல் திருசெந்தூரில் இருந்தும் நிரந்தரமாக 5 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம் 400 பயணிகள் வரை கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com