அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது


அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது
x

கோப்புப்படம்

மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை

காரப்பாக்கம்,

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தி.மு.க அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் மும்மொழிக் கொள்கையை ஆதரவாக பேசி வருகின்றன.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கம் கடந்த வியாழக்கிழமை (06.03.2025) தொடங்கியது. தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பா.ஜ.க-வினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

சில இடங்களில் மாணவர்கள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட மறுத்த நிலையில், மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைத்தனர். அதேபோல, சில இடங்களில், பா.ஜ.க-வினர் மாணவர்களைக் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை காரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாயில் முன்பு, பா.ஜ.க சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று (07.03.2025) நடைபெற்றது. அப்போது, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களை பா.ஜ.க-வினர் பிஸ்கட் வழங்கி வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உடனே பா.ஜ.க-வினர் காவல் நிலையம் முன்பு குவிந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story