தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன் ...! பட்டினியால் உயிரிழந்த சோகம்

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன் பசியால் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன் ...! பட்டினியால் உயிரிழந்த சோகம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்திரி தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தான். அந்த தள்ளுவண்டியில் துண்டை விரித்து, அதன் மீது சிறுவன் கிடத்தப்பட்டிருந்தான்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த அந்த சிறுவன் நீலநிற டி-சர்ட்டும், வெள்ளை மற்றும் சிகப்பு நிற கட்டம்போட்ட டிரவுசரும் அணிந்திருந்தான். அவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்ற விவரம் தெரியவில்லை.

கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவனை தலையணையால் அமுக்கியோ, கழுத்தை நெரித்தோ கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி சிறுவன் இறந்து கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரித்து வந்தனர். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவன் இறந்ததற்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி உள்ளது. மேலும் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறுவன் பசியால் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com