

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில், மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த திலக், சிலுவை, பிரைட்வின், ரபிஸ்டன், லபிஸ்டன் மற்றும் சிலுவைபிச்சை ஆகிய 6 மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் படகின் எஞ்சின் பழுதானது. அதனைச் சரிசெய்ய முடியாமலும், செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.
இதற்கிடையில் கடந்த 18-ம் தேதி ரபிஸ்டன் என்பவர் தனது மனைவி டிலெட்டாவுக்குச் சிரமப்பட்டுத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீனவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் கலெக்டர் மற்றும் கடலோரக் காவல் படையினரிடம் மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். கடலோரக் காவல் படையினருடன் இணைந்து மணப்பாடு மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை கன்னியாகுமரியிலிருந்து 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும், பழுதான படகையும் மீனவர்கள் கண்டுபிடித்துப் பத்திரமாக மணப்பாட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் மணப்பாடு கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.