6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் 438 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் நேற்று 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் 438 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதிதாக தொற்று

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 256 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 139 பேரும், கோவையில் 47 பேரும், செங்கல்பட்டில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கரூர், விழுப்புரத்தில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 27 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 93 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சத்து 55 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

6 பேர் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 8-ந்தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,343 பேரில் 1,905 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1,874 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 19 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. தமிழகத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளில் இதுவரை 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,457 பேர் உயிரிழந்துள்ளனர்.

459 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து 459 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 145 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 35 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 246 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 69 அரசு, 188 தனியார் நிறுவனங்களில் தற்போது கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com