

சென்னை,
கோவை குண்டுவெடிப்புக் குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்குவதா? தீவிரவாதிகளை ஆதரிக்கும் ஜோசப் விஜய் அரசுக்கு கடும் கண்டனத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, அமைதி பூங்காவாக திகழ்ந்த கோவையை ரத்தக்களறியாக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்த நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அப்பாவி பொதுமக்கள் 58 பேரின் உயிர்களை பறித்து, 250-க்கும் மேற்பட்டோரின் வாழ்வை நிரந்தர ஊனமாக்கிய கொடூர பயங்கரவாத செயலில் ஈடுபட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி, முகமது அலி, மொனப்பா என்கிற முகமது ஹசன், முகமது அஜம் மற்றும் நவாப் கான் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு, தவெக அரசு 60 நாட்கள் நீண்டகால பரோல் வழங்கியிருப்பது மிக கடுமையான கண்டனத்திற்குரியது.
குடும்பத்தை காரணம் காட்டி இத்தகைய பயங்கரவாத குற்றவாளிகளுக்கு சலுகைகளும், நீண்டகால பரோல்களும் தாராளமாக வழங்கப்படுமானால், அன்று தங்கள் உற்றார், உறவினர்களை, பெற்றோரை, பிள்ளைகளை அநியாயமாக பறிகொடுத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாத வடுக்களுடனும் கண்ணீருடனும் வாழும் 58 அப்பாவி குடும்பங்களுக்கு என்ன நீதி?
திட்டமிட்ட பயங்கரவாதம் — உணர்ச்சிவசப்பட்ட செயலல்ல!
இந்த கொடூரம் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு திடீரென நிகழ்ந்த தவறல்ல. பல மாதங்கள் சதித்திட்டம் தீட்டி, திட்டமிட்டு, அப்பாவி மக்களை கொன்று குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட குரூரமான பயங்கரவாதச் செயல். மருத்துவமனை, பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் மனிதநேயமற்று நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகளுக்கு எந்தவொரு சமாதானமும் இருக்க முடியாது.
தீவிரவாத கொள்கைகளாலும், கொடூர வன்முறை மனநிலையிலும் ஊறிப்போய் இவ்வளவு பெரிய மனித பேரழிவை ஏற்படுத்திய இத்தகைய குற்றவாளிகளை இரண்டு மாதங்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிப்பது, சமூக அமைதிக்கு விடுக்கப்படும் மாபெரும் அச்சுறுத்தல் ஆகும்.
திட்டமிட்டு நாசவேலை செய்த பயங்கரவாதிகளுக்கு காட்டப்படும் எந்தவொரு சிறு சலுகையும் சட்டத்தின் மாண்பையும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அடியோடு தகர்த்துவிடும். தேசத்தின் அமைதியையும் அப்பாவிகளின் உயிரையும் பறித்த கொடூர குற்றவாளிகளுக்கு எந்த காலத்திலும், எந்த காரணத்தை கொண்டும் துளிக்கூட மன்னிப்போ, சலுகையோ காட்டப்பட கூடாது.
ஆகவே, கொடூர குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 60 நாட்கள் பரோலை தவெக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் கண்ணீருக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து, பயங்கரவாத குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்த தயவுதாட்சண்யமும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.