மோடிக்கு பாராட்டு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

கொரோனா பாதிப்பை சீர் செய்ய ரூ.6.29 லட்சம் கோடி சலுகைகள் மத்திய அரசு அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
மோடிக்கு பாராட்டு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
Published on

ரூ.6.29 லட்சம் கோடி சலுகை

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உங்களுடைய புரட்சிகரமான தலைமையினால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மத்திய அரசு உடனடி மற்றும் திறமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுகாதாரத்துறை உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டம், நுண் கடன் நிறுவனங்கள் மூலம் 25 லட்சம் பேர் கடன் பெறும் வகையிலான திட்டம், பதிவு செய்யப்பட்ட சுற்றுலாவாசிகள், வழிகாட்டிகள் (கைடுகள்), பயண மற்றும் சுற்றுலாவை நம்பி இருப்பவர்களுக்கு நிதி உதவி, குழந்தைகள், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான படுக்கைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பொது சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, உரங்கள் வாங்க விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் திட்டம் மேலும் நீட்டிப்பு உள்பட ரூ.6.29 லட்சம் கோடிக்கு பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதை, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள்.

பாராட்டு

இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் அமையவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த தொகைகளை இந்த பெருந்தொற்றில் ஒதுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட துறைகளை அடையாளம் கண்டு, அந்த துறைகளில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக விவசாயிகள், அமைப்புசாரா துறைகளின் ஊழியர்கள், சுற்றுலா தொழிலை நம்பி இருப்பவர்களின் நலன், சாதாரண மனிதனுக்கு உணவு பாதுகாப்பு உள்பட நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்று வரும்போது, அதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் இரக்கத்தின் உருவமாக திகழ்வதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளை சீர் செய்வதற்கும், பொருளாதார ரீதியாக அவர்களுடைய நிலைகளை கை தூக்கி விடுவதற்கும் இந்த அறிவிப்புகள் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com