

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில். தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு சட்டம் 45/1994-க்கு எதிராக மாண்பமை சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் 27.05.2026 அன்று விசாரணைக்கு வர உள்ளன.
இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் நோக்கில், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வட தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.