7 மணிநேரம் மின்வெட்டு: நள்ளிரவில் சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்

சாலை மறியல் போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
Published on

சென்னை,

திருவொற்றியூர் தியாகராயபுரம் தாங்கல் பகுதியில் இரவில் 7 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதும், சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

நள்ளிரவில் மின்வெட்டு

இந்நிலையில், நேற்று சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் தாங்கல் பகுதியில் இரவில் 7 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் வள்ளலார் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் படுத்து போராட்டம்

மேலும் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினமும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது என்றும், நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈசிஆர் பகுதியில் மின்வெட்டு

அதே போல நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அந்த பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். இது குறித்து அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், முதலமைச்சர் விஜய் வீட்டிற்கு செல்லும் பாலவாக்கம் சாலையை முற்றுகையிட்டு தங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com