கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
Published on

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 5 பேரை கடந்த ஜனவரி மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைதான முகமது அசாரூதீன் (23), பைரோஸ் (28), நவாஸ் (26), அப்சர்கான் (28), முகமதுதவ்பீக் (25), சேக்இதயதுல்லா (42), சனோபர் அலி (28) ஆகிய 7 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிந்து வருகிற 8-ந் தேதி மீண்டும் 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து 7 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com