7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்


7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
x
தினத்தந்தி 21 Jan 2026 2:59 PM IST (Updated: 21 Jan 2026 4:09 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை இதுவரை கைது செய்துள்ள அனைத்து மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இன்று (21-1-2026) சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு பலமுறை கண்டித்து கூறியும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இந்த பிரச்சினையை அணுக வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா - இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இதுவரை கைது செய்திருக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story