தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7 டெண்டர்கள் ரத்து

ரத்து செய்ததற்கான காரணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7 டெண்டர்கள் ரத்து
Published on: 

சென்னை,

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7 டெண்டர்கள் ரத்து செய்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெடுஞ்சாலை ஆணையம்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம், கடந்த தி.மு.க. ஆட்சியில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் பயணிகளுக்காகச் சாலையோர வசதிகள் மையங்களை செயல்படுத்தத் திட்டமிட்டது.

இதன்படி, வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் பின்னர் ஒப்படைத்தல் அடிப்படையில் வசதி மையங்களை விழுப்புரம், திருப்பூர், திருவள்ளூர், திருப்பத்தூர், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அமைக்க முடிவு செய்து, டெண்டர் கோரியது. இந்தச் சூழலில், நிர்வாகக் காரணங்களுக்காக விதிமுறைகளின் பிரிவு 2.5.1-ன் கீழ் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள், ஓய்வறைகள் மற்றும் வாகனப் பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றைத் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும். திட்டத்தின் மதிப்பு மற்றும் திட்டத்தை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவான விவரங்கள் இல்லை. இருப்பினும், நிர்வாகக் காரணம் எனக் கூறி ஏற்கனவே பலமுறை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட டெண்டர்களை ரத்து செய்துள்ளது.

7 மாவட்டங்களில்

இந்தநிலையில், தற்போது 7 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் சாலையோர வசதிகளை அமைப்பதற்கான டெண்டர்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com