

கன்னியாகுமரி,
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்து 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்கள் அதிகம் வாழ்ந்த கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர்-கொச்சி மாகாணத்துடன் (கேரளா) இணைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகினர். மொழி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை காட்டுத்தீயாய் பரவியது.
குமரி மண்ணை மீட்டெடுக்க மார்ஷல் ஏ. நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் மாபெரும் எல்லை போராட்டம் வெடித்தது.1954 ஆகஸ்ட் 11-ம் தேதி மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது போலீசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சில தமிழர்கள் உயிர்நீத்தனர். இந்த தியாகம் வீண் போகவில்லை.
தமிழர்களின் தொடர் போராட்டத்திற்கும், ரத்த தியாகத்திற்கும் பணிந்த மத்திய அரசு, 1956 நவம்பர் 1-ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களை முறைப்படி தமிழ்நாட்டுடன் இணைத்தது.
போராடி பெற்ற இந்த வரலாற்று வெற்றியை நினைவு கூரும் வகையில், குமரி மண்ணை மீட்ட தியாகிகளுக்கு இன்று தமிழக மக்கள் நெஞ்சார்ந்த வீரவணக்கத்தை செலுத்தி மகிழ்கின்றனர்.