இலங்கை கடற்படையால் 8 பேர் கைது: இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 6-ம் தேதி கற்பிட்டி பகுதியில் விசைப்படகு மீனவர்கள் 10 பேரும், கச்சத்தீவு அருகே நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரும் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் இந்த அராஜக போக்குக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் எந்த முடிவும் எட்டவில்லை. மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்காது.

கடந்த மே மாதம் பிரதமர் மோடி இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இருநாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வந்து மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com