சென்னை விமான நிலையத்தில் ரூ.8¾ கோடி ஹெராயின் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சினிமா படபாணியில் துபாயில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.8¾ கோடி ஹெராயினை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தான்சானியா நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.8¾ கோடி ஹெராயின் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தான்சானியா நாட்டைச்சேர்ந்த ஜோசப் பாட்ரிக் (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், உகாண்டாவில் இருந்து துபாய் வழியாக சுற்றுலா பயணியாக சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் எதுவும் இல்லை.

வயிற்றில் மறைத்து கடத்தல்

பின்னர் ஜோசப் பாட்ரிக்கை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் ஏதோ மர்ம பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. உடனடியாக அவரை 'ஸ்கேன்' செய்து பார்த்தனர். அதில் அவரது வயிற்றில் அதிக அளவில் மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது.

ஜோசப் பாட்ரிக்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் மறைத்து வைத்து கடத்திய மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அதில், போதை பொருளை 86 மாத்திரை கேப்சூலில் அடைத்து, அதனை விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெராயின் போதை மாத்திரைகள்

அந்த கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் அவை ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. ரூ.8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தான்சானியா நாட்டு வாலிபர் ஜோசப் பாட்ரிக்கை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் சென்னை மற்றும் கோவையில் இதேபோல் சினிமா படபாணியில் ரூ.13 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது சென்னையில் அதே பாணியில் போதை மாத்திரைகள் கடத்தி வந்த தான்சானியா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com