ஒரே நாளில் 8 கொலைகள்: தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஆட்சிக்கு வந்து தவெக சாதித்தது என்ன? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
 எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Published on: 

தாராபுரம்,

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தளவாய்பட்டினம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

"ஒரு சட்டசபை உறுப்பினர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவருக்காக சுமார் 7,000 பேர் தேர்தல் பணியாற்ற வேண்டும். அவ்வாறு 7,000 பேர் இரவு - பகல் பாராமல் பணியாற்றி வெற்றிபெறச் செய்தால், குதிரை பேரத்தின் வாயிலாக விலைபோய் விட்டார். குதிரை பேரத்தில் விலை போனதற்கு தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

அவர் வெற்றி பெற்று வந்தால், இந்தத் தொகுதிக்கு நிறைய திட்டங்கள் கிடைக்கும் என முதல்-அமைச்சர் விஜய் கூறுகிறார். அவர் ஏற்கெனவே வெற்றிபெற்றுத்தானே வந்தார். அவர் வெற்றிபெற்ற பிறகுதானே ராஜினாமா செய்ய வைத்திருக்கிறீர்கள்.

ஒரு முதல்-அமைச்சர் என்றால் 234 தொகுதிகளுக்கும் பொதுவானவர். தேர்தலுக்கு முன்னர் வரையில் வெவ்வேறு கருத்துகளும் எண்ணங்களும் இருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு முதல்-அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அந்த எண்ணத்தில் அவர் செயல்பட்டாரா? இல்லை.

அவர் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களின் கட்சியில் இணைத்தது நியாயமா? இதுதான் தூய சக்தியா? இது திருட்டு சக்தி. நம் எம்எல்ஏ-வை திருடி விட்டார்கள்.

பிரசார மேடையில் அந்த அம்மா (தவெக வேட்பாளர் சத்யபாமா) அழுகிறார்கள். என்னவொரு நடிப்பு. விஜய்யே தோற்றுவிட்டார். நீங்கள் வெற்றி பெறுவதற்கு எத்தனை பேர் உழைத்தனர். அவர்களின் மனம் எப்படி பாடுபடும்? ஆனால், நீங்கள் மேடையேறி அதிமுகவையே விமர்சிக்கிறீர்கள். அதிமுக இருப்பதால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. முன்னரே தேர்தலில் உங்களை நிறுத்தாமல் வேறொருவரை நாங்கள் போட்டியிட வைத்திருந்தால், இடைத்தேர்தல் என்ற ஒன்றே வந்திருக்காது.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. நேற்று மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளன. தவெக ஆட்சிக்கு வந்த பின் 285 கொலைகள் நடந்துள்ளன. ஆட்சிக்கு வந்து தவெக சாதித்தது என்ன?

விஜய் போன்ற முதல்-அமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா? டம்மி முதல்-அமைச்சர் விஜய் என நிரூபணமாகி உள்ளது. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கிறார்கள். சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி என்ன பயன்? என கேள்வி எழுப்பினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com