

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நிச்சிஷ் (8 வயது). இவர், ஆவடி கவுரி பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் நிச்சிஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் இருட்டாக இருந்துள்ளது.
இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த பூனை பயங்கரமாக சத்தமிட்டு கத்தியது. இதையடுத்து நிச்சிஷ் பூனையை தூக்குவதற்காக அருகில் சென்றார். அப்போது பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பு திடீரென நிச்சிசை கடித்தது. இதில் அலறித்துடித்த சிறுவனை அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.