பாலின வன்முறைக்கு எதிராக சென்னை மாநகராட்சியில் 16 நாள் விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்

பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
சென்னை மாநகராட்சியில் 16 நாள் விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்
சென்னை மாநகராட்சி
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக 25.11.2026 முதல் 10.12.2026 வரை நடைபெறவுள்ள 16 நாள் விழிப்புணர்வு இயக்கம் இன்று (25.11.2026) தொடங்கப்பட்டது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

16 நாள் விழிப்புணர்வு இயக்கம்

சென்னை மாநகராட்சியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக 25.11.2026 முதல் 10.12.2026 வரை நடைபெறவுள்ள 16 நாள் விழிப்புணர்வு இயக்கம் இன்று (25.11.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் தொடங்கப்பட்டது.

பாலின கொள்கை ஆய்வகம்

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) பி. சாமூண்டீஸ்வரி, இணை ஆணையாளர்கள் க. கற்பகம், (கல்வி), செ. சரவணன், (பணிகள்) ஆகியோர் பங்கேற்று, பாலின சமத்துவம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக செயல்படுதல், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலின கொள்கை ஆய்வகம், பள்ளிகளில் கல்விக்கான திட்டங்கள், மாணவர்கள் இடையில் நின்றுவிடாமல் அவர்களை கண்காணித்து பள்ளிகளுக்கு மீண்டும் அழைத்து வந்து இடைநிற்றலைத் தடுத்தல், மாநகராட்சியில் பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சிறப்புடன் எடுத்துரைத்தனர்.

சமூக பங்கேற்பு முயற்சிகள்

சென்னை மாநகராட்சியின் சிறப்புத் திட்டங்கள் துறையின் கீழ் செயல்படும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab – GPL), நிர்பயா நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பாதுகாப்பான நகர திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஆய்வகமானது, விழிப்புணர்வு, ஆய்வு, கொள்கை ஆதரவு மற்றும் சமூக பங்கேற்பு முயற்சிகள் மூலம் சென்னையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான பொது தளங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கைரேகை

இதன் தொடர்ச்சியாக, பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்த விழிப்புணர்வு பலகையில் அனைவரும் கைரேகையினை பதித்து, கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ச்சியாக, கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ஆரஞ்சு நிறம்

இந்நிகழ்வினையொட்டி, ரிப்பன் கட்டடமானது 25.11.2026 முதல் 10.12.2026 வரை 16 நாட்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத, ஒளிமயமான எதிர்காலத்தை குறிக்கும் சர்வதேச அளவிலான பிரச்சார நிறமே இந்த ஆரஞ்சு நிறமாகும். இந்த ஒளி அலங்காரமானது, அப்பிரச்சாரத்தின் செய்தியை வலுப்படுத்துவதுடன், பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதிலும் ஒழிப்பதிலும் சென்னை மாநகராட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும்.

பாலின அடிப்படையிலான வன்முறையற்ற, பாதுகாப்பான, சமத்துவமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சென்னையை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியை இவ்வியக்கத்தின் மூலம் சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வக குழுவின் தலைவர் கே.ஏ.என். லெஜிஸ், கிரடாய் சென்னை அறக்கட்டளையின் இயக்குநர் ஆஷா மரினா, மாவட்ட சமூக நல அலுவலர்கள் வி. முத்துசெல்வி (தெற்கு), எம்.எஸ். ஸ்வாதி (வடக்கு), புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர்/டிஜிட்டல் பிரிவு தலைவர் கே. திருப்பதி, குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் நிறுவனர் ரஞ்சினி மணியன், வழக்கறிஞர் திருமதி காந்திமதி, இணைப் பேராசிரியர் ஈஸ்வரி ரமேஷ், காவல் துறையினர், மாநகர போக்குவரத்து கழகத்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள், மாநகராட்சி பள்ளிகளில் உள்ள பாலின கொள்கை ஆயவகத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், திருநங்கைகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X