மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி... தீயில் சிக்கி 17 வயது சிறுவன் பலி!

தார்ப்பாயை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக தீயில் சிக்கினார்.
தீயில் சிக்கி சிறுவன் பலி
Published on

திண்டுக்கல்,

மின்சாரக் கம்பியில் உரசிய வைக்கோல் லாரியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வைக்கோல் லாரியில் தீ

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று இவருடன் இவரது மகன் பெரிய கருப்பன் (வயது 17) வைக்கோல் விற்பனைக்கு சென்றுள்ளான். இருவரும் மார்க்கம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது லாரியின் மேல் போடப்பட்டிருந்த தார்ப்பாயை அகற்றுவதற்காக பெரிய கருப்பன் லாரியின் மீது சென்றுள்ளான்.

சிறுவன் உடல் கருகி பலி

அப்போது லாரியின் மீது சென்ற மின்சாரக் கம்பி, லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியுள்ளது. இதையடுத்து வைக்கோல் திடீரென தீப்பற்றி, லாரி முழுவதும் தீ மளமளவென பரவியது. தார்ப்பாயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெரிய கருப்பன் தீயில் சிக்கி, உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தீயை அணைக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தும், தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் வந்தது. பின்னர், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த தீ விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com