சாலையில் நடந்து சென்றவரை கரடி துரத்தியதால் பரபரப்பு

கோத்தகிரி கடைவீதி சாலையில் நடந்து சென்றவரை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நடந்து சென்றவரை கரடி துரத்தியதால் பரபரப்பு
Published on

கோத்தகிரி கடைவீதி சாலையில் நடந்து சென்றவரை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரடி உலா

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கடைவீதி பகுதியில் கரடி உலா வந்தது.

தொடர்ந்து போலீஸ் நிலையம், பள்ளிவாசல் அருகே உள்ள தனியார் கிளீனிக் அருகே சாலையின் குறுக்கே திடீரென கரடி வந்தது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் கரடி அருகில் இருந்த சந்து பகுதிக்குள் சென்றது. கரடிக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் நின்றவரும் அச்சத்தால் அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கி சென்றார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

துரத்தியதால் பரபரப்பு

பின்னர் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு கரடி வந்தது. அப்போது சாலையில் நடந்து சென்றவரை கரடி திடீரென துரத்தியது. இதனால் அச்சமடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கரடி போலீஸ் நிலையம் முன்பு உலா வந்ததால் போலீசார் அச்சமடைந்தனர். கடந்த ஒரு மாதமாக அதே சாலையில் கரடி உலா வருவதால், பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது.

இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். போலீசாரும் ரோந்துப் பணிக்கு செல்ல பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com