படப்பை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

படப்பை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
படப்பை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
Published on

நீச்சல் பயிற்சியில் ஈடுபட

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் பாரதியார் தெரு ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2). நேற்று முன்தினம் தாரிகா தனது மகன்களை அதே பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றார். பின்னர் அங்கு இருந்து தனது இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாரிகா சென்றார்.

சாவு

திரும்பி வந்து பார்த்தபோது சஸ்வின் வைபவ்வை காணவில்லை. அங்கும் இங்கும் தன்னுடைய மகனை தேடி உள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் தன்னுடைய மகன் மூழ்கி கிடப்பதை பார்த்த தாரிகா அலறி துடித்தார். நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனை பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிறுவனை மீட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தபோது பயிற்சியாளர் இருந்தாரா? உரிமையாளர் இருந்தாரா? சிறுவன் எப்படி நீரில் மூழ்கி இறந்தான் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com