

வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில், தாயின் மடியில் இருந்த 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தையை, தாய் தைரியமாகப் போராடி உயிருடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை மேற்பாராலை தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிப்பவர் குருசாமி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களது 5 வயது மகன் தீக்சிதன். சிறுவன் தீக்சிதன் நேற்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4:30 மணி அளவில், பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
குடியிருப்பின் வெளிப்பகுதியில் தாய் நாகஜோதியின் மடியில் அமர்ந்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள தேயிலைப் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் தீக்சிதனை கவ்விக்கொண்டு தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது.
தன் கண் முன்னே மகன் சிறுத்தையின் வாயில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நாகஜோதி, சற்றும் பயப்படாமல் அலறியடித்தபடி சிறுத்தையைத் துரத்திக்கொண்டு ஓடினார். சுமார் 100 அடி தூரத்திற்கும் மேலாக சிறுத்தையைப் பின் தொடர்ந்த தாய், மரக்கட்டைகளை வீசியும், சத்தமிட்டும் துணிச்சலாகப் போராடினார். தாயின் தொடர் கூச்சலாலும், விடாப்பிடியான துரத்தலாலும் மிரண்ட சிறுத்தை, சிறுவனை தேயிலைத் தோட்டத்திற்குள் போட்டுவிட்டு அடர்ந்த புதருக்குள் ஓடி மறைந்தது.
சிறுத்தையின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுவன் தீக்சிதனின் காது மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் உதவியுடன், உடனடியாக சிறுவன் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேயிலைத் தோட்டக் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுத்தையிடம் இருந்து மகனை மீட்ட தாய் நாகஜோதியின் தைரியத்தை வனத்துறையினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.