திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கு: கைக்குழந்தையுடன் காதலியை திருமணம் செய்த வாலிபர்- கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு

காதலித்து விட்டு திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கில் கைக்குழந்தையுடன் காதலியை வாலிபர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கு: கைக்குழந்தையுடன் காதலியை திருமணம் செய்த வாலிபர்- கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்தவர் அஜித் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள். சத்யாவை அஜித் காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த சத்யா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக காதலன் அஜித் மீது கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சத்யா கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கில் ஜாமீன் கோரி கோர்ட்டில் அஜித் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காதலியை திருமணம் செய்து கொள்வதாக அஜித், கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் முன்பு திருமணம் நடைபெற நீதிபதியும் உத்தரவிட்டார்.

கோர்ட்டு வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் முன்பு அஜித், சத்யா திருமணத்திற்கு ஏற்பாடு நடைபெற்றது. உடனடியாக அவரது வீட்டார் மாலைகள் மற்றும் மாங்கல்யம் வாங்கி வந்தனர். வக்கீல்கள் பர்வின் பானு, சங்கீதா முன்னிலையில் சத்யாவின் கழுத்தில் அஜித் தாலிகட்டினார். அப்போது கைக்குழந்தையை சத்யா கையில் வைத்திருந்தார். திருமணம் முடிந்ததும் மணமக்களை வக்கீல்கள், உறவினர்கள் வாழ்த்தினர்.

திருமணம் செய்த பின் 2 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அஜித்திற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறினார். அதன்பின் தனது காதல் மனைவியுடன் அஜித் புறப்பட்டு சென்றார். காதலித்துவிட்டு ஏமாற்றிய நிலையில் கைக்குழந்தையுடன் இருந்த காதலிக்கு வாலிபர் தாலிகட்டியது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com